தருமபுரி

கெளாபாறை கிராமத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக சீராக குடிநீர் விநியோகிக்கப்படாததால் வெற்றுக் குடங்களுடன் மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனலா, அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே எல்லப்புடையாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கெளாபாறைக் கிராமம். இந்த கிராமத்தில் 1500–க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்தக் கிராமத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கிணறுகள், ஆழ்துளை குழாய்களில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால், பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த கிராமத்திற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் சினம் கொண்ட மக்கள் நேற்றுக் குடிநீர் கேட்டு அரூர் – சித்தேரி சாலையில் கெளாபாறையில் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், தாசில்தார் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும். குடிநீரில் கழிவுநீர் சேர்ந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.