விருதுநகர்

பத்து ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் திருச்சுழி – நரிக்குடி இடையேயான 20 கி.மீ. சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்குச் செல்ல பிரதான சாலையாக இருப்பது திருச்சுழி – நரிக்குடி சாலை.

இந்த சாலை கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் இந்தச் சாலை பராமரிப்பு இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

மாநில நெடுஞ்சாலைத் துறையினர் இந்தச் சாலையில் உள்ள மேடு, பள்ளங்களில் கிராவல் மண்ணை நிரப்பினர். இரண்டு நாள்கள் வாகன போக்குவரத்திற்கு பின்னர் நிரப்பப்பட்ட கிராவல் மண் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.

பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு அருப்புக்கோட்டை அருகே தமிழ்பாடியில் இருந்து தினசரி 30 டன் சல்லிக் கற்கள் கனரக வாகனங்கள் மூலம் திருச்சுழி – நரிக்குடி சாலையில் கொண்டுச் செல்லப்படுகிறது. இதனால், இந்தச் சாலை இன்னமும் மோசமாக சேதமடைந்து கொண்டுதான் இருக்கிறது.

திருவில்லிபுத்தூரில் இருந்து பார்த்திபனூர் வரை உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வலியுறுத்தினர். அதன்பேரில் மத்திய சாலைப் போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இதற்கான மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

திருவில்லிபுத்தூரில் இருந்து பார்த்திபனூர் செல்லும் சாலை திருச்சுழி, நரிக்குடி வழியாகத்தான் செல்கிறது.

தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் திருச்சுழி – நரிக்குடி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் திருச்சுழி – நரிக்குடி சாலையை உடனடியாக சீரமைக்க அரசிடம் இருந்து சிறப்பு நிதியினை பெற்று மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.