லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கிடா வெட்டி தீபாவளிபோல் கொண்டாடி சந்தோஷப்பட்ட சம்பவம் விருத்தாச்சலம் அருகே நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே மங்களம்பேட்டை காவல் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக தமிழ்மாறன் என்பவர் பணிபுரிந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுவாம்பூர் கிராமத்தில் இரு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

கோஷ்டி மோதல் காரணமாக, சிறுவாம்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ் இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார்.

காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், கோஷ்டி மோதல் பிரச்சனையைத் தீர்க்க முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜ் 20 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கோவிந்தராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில், இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனிடம், கோவிந்தராஜ் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் கைது செய்யப்பட்டதை அடுத்து கிராமத்து மக்கள் கிடா வெட்டி, விருந்து வைத்து தீபாவளி பண்டிகையைப்போல் கொண்டாடினர். மேலும், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜூக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.