200 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தில் இருக்கும் வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தலைமுறை தலைமுறையாக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடுகின்றனர் விசார் கிராம மக்கள்.

காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்டது விசார் கிராமம். இங்குள்ள பீமேஸ்வரர் கோயிலை ஒட்டிய தாமரைக்குளம் அருகே 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் உள்ளது.

இந்த மரத்தில், நூற்றுக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன. இவை இரையைத் தேடி இரவு நேரங்களில் வெளியில் சென்றுவிடும். காலையில் வழக்கம்போல் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.

இந்த வெளவால்களை, தங்கள் கிராமத்தின் நினைவுச் சின்னமாக மக்கள் கருதுகின்றனர்.
இதனால், தீபாவளி பண்டிகையின்போது அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பல தலைமுறைகளாக வெடிப்பதில்லை.

அதற்குப் பதிலாக, ஒளி தரும் பட்டாசுகளான பூச்சட்டி, சங்கு சக்கரம், மத்தாப்பு போன்றவற்றையும், பூண்டு வெடி, குருவி வெடி போன்ற சிறிய இரக பட்டாசுகளையும் மட்டும் வெடித்து வருகின்றனர்.

அவற்றையும் வெளவால்கள் தொங்கும் மரத்திலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே வெடிக்கின்றனர். எவ்வித இடையூறுகளாலும், அந்த வெளவால்கள் மரத்தை விட்டு செல்லக் கூடாது என்பதில் கிராம மக்கள் கண்ணும், கருத்துமாக இருக்கின்றனர்.