சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை…நர்சுகள் இல்லை…செம்மஞ்சேரி அரசு மருத்துமனையை சூறையாடிய பொது மக்கள்…

சென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருத்துவர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் செம்மஞ்சேரி அரசு மருத்துமனையை அடித்து நொறுக்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியை அடுத்த சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிரிக்கெட் பந்து காம்பெளண்ட்  சுவரை தாண்டி விழுந்துள்ளது அதை எடுப்பதற்காக கார்த்திக் என்ற 8 வயது சிறுவன் சுவர் ஏறி குதித்த போது, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தான்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை செம்மஞ்சேரி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களோ, செவிலியர்களோ டூட்டியில் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால் படுகாயமடைந்திருந்த  சிறுவன் கார்த்திக் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செம்மஞ்சேரியை அரசு மருத்துமனையை சூறையாடினர். அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.

மேலும் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து வீசினர். அதுமட்டுமல்லாமல்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஆனால் எந்த நேரத்திலும் பொது மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடலாம் என்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.