People arrested by the police who eat beef and held in protest

திருவாரூர்

திருவாரூரில் மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடையைக் கண்டித்து மாட்டுக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் இரண்டு பெண்கள் உள்பட 32 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு தடை விதித்தது.

இந்தத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் இயக்கம் சார்பில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நேற்று நடந்தது.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முரளி தலைமை வகித்தார். இப்போராட்டத்தில், மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்தும், சென்னையில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ஆசாத், ஸ்ரீதர், ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து காவலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 மக்கள் அதிகாரம் அமைப்பினரை கைது செய்தனர்.