திருவள்ளூர்

திருவள்ளூரில் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ஏரிக்கரை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் சாலை, குடிநீர், கழிவு நீர்க் கால்வாய், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக இல்லை. எனவே, இங்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஆவடி பெருநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதும், பெண்கள் காலி குடங்களுடன் குடிநீருக்காக நெடுந்தொலைவு செல்வதும் தினசரி நிகழ்வுகளாகத் தொடர்கின்றன. மேலும், தெருவிளக்கு எரியாததால் பெண்கள் இரவு நேரங்களில் தெருவில் நடக்க பயப்படுகின்றனர். சாலை வசதி இல்லாததால் பல  விபத்துகளும் நிகழ்கின்றன.

இந்த நிலையில், தங்களின் கோரிக்கைகள் நீண்ட நாள்களாக நிறைவேற்றப்படாமல் இருப்பதால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நேற்று காலை, ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகே, புதிய இராணுவ நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, நிகழ்விடத்திற்கு வந்த ஆவடி காவல் ஆய்வாளர் கர்ணன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, மக்கள் தங்கள் புகார் மனுவை ஆவடி பெருநகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.