Asianet News TamilAsianet News Tamil

குடிநீரில் புழுக்கள் கலந்து வந்ததால் மக்கள் கோபம்; சுகாதாரமான தண்ணீர் கேட்டு  ஆர்ப்பாட்டம்...

People are angry because of worms in drinking water Demonstration of healthy watering request ...
People are angry because of worms in drinking water Demonstration of healthy watering request ...
Author
First Published Mar 14, 2018, 7:41 AM IST


கடலூர்

கடலூரில், விநியோகத்தின்போது குடிநீரில் புழுக்கள் கலந்து வந்ததால் கோபமடைந்த மக்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்தனர். அவர்கள், "தங்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரினர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் புழுக்கள் வந்ததால் கோபமடைந்த அந்தப் பகுதி மக்கள் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வெற்றுக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவலாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், "சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். 

இதனை ஏற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து 22-வது வார்டு மக்கள், "கடந்த சில மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 

விலை கொடுத்து வாங்க முடியாத சிலர், வேறு வழியின்றி நகராட்சி குடிநீரை குடித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உடல் நலகோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

எனவே, அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சுகாதாரமான குடிநீர் வழங்காவிட்டால், நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios