Pensioners will be use adar card for for age proof certificate

80 வயதைத் தாண்டிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் குடும்ப ஓய்வூதியம் பெற மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வயது சான்று ஆவணமாக சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் க.சண்முகம் பிறப்பித்த அரசாணையில் ,ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரரின் வயதை சரிபார்ப்பதற்கு ஓய்வூதிய ஆணை, அடிப்படை ஆவணமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய ஆணை இல்லாவிட்டாலும் அல்லது ஓய்வூதிய ஆணையில் வயது தொடர்பான பதிவுகள் இல்லாவிட்டாலும், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வயதை நிரூபிக்க, மத்திய வருமான வரி அலுவலகத்தால் வழங்கப்படும் பான் அட்டை, பள்ளி இறுதித்தேர்வு சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வயது சான்றாக சமர்ப்பிக்கலாம் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பெரும்பான்மையான ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களிடம், அவர்களது வயதை உறுதி செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாத நிலையில், அவர்களுக்கு அலைச்சலை தவிர்க்க, கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆதார் அடையாள அட்டையையும் ஒரு ஆவணமாக ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிடலாம் என்று கருவூல கணக்கு ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அரசு கவனமாக பரிசீலித்தது. பான் அட்டை, பள்ளி இறுதித்தேர்வு சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை ஏதுவும் இல்லாத நிலையில், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் குடும்ப ஓய்வூதியம் பெற மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வயது சான்று ஆவணமாக சமர்பிக்கலாம் என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.