வேலூர்,

விபத்தில் சிக்கிய லாரியின் தகுதிச்சான்று முடிந்ததால் சிறைப்பிடிக்கப்பட்ட லாரிக்கு அபராதம் கட்ட முன்வந்தும், வாங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததால் மனமுடைந்த லாரி அதிபர் வேலூரில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

வாலாஜா அருகே உள்ள தலங்கை கோவிந்தசேரிகுப்பம் பகுதியை சேர்ந்த லாரி அதிபர் பி.கே.துரை (55). இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் 5 கன்டெய்னர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.

கடந்த மாதம் 28–ஆம் தேதி பொருட்கள் ஏற்றி வருவதற்காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனது ஒரு கன்டெய்னர் லாரியை அனுப்பினார் துரை.

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே அந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரியை கைப்பற்றி வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது லாரிக்கு தகுதிச்சான்று முடிந்து 2 மாதங்களாகி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்த லாரிக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது. உரிமையாளர் துரை அந்த தொகையை செலுத்த வந்தபோது அவரிடம் அபராதத்தை வாங்கிக் கொள்ளாமலும், லாரியை அனுப்பாமலும் இருந்துள்ளனர்.

கடந்த 28–ஆம் தேதி முதல் 10–ஆம் தேதி வரை 14 நாட்களாக துரை முயற்சி செய்தும் வட்டார போக்குவரத்து அலுவலர் வந்தால்தான் அபராதம் பெறமுடியும் என்றும் கூறி அதுவரை லாரியை விடுவிக்க முடியாது என்று அலுவலக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த துரை வெள்ளிக்கிழமை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு அலுவலகத்திற்குள் சென்ற அவர், பாட்டிலில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை திடீர் என்று தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

மேலும் துணை ஆணையர் அங்கு இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலர் இராமகிருஷ்ணன், மோட்டார்வாகன ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் அங்கு வந்து துரையிடம் விசாரணை நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி காவல்துறையினரும் அங்கு வந்து விசாரித்தனர்.

மேலும் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து லாரியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாரபோக்குவரத்து அலுவலர் இராமகிருஷ்ணன் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற துரையை காவலாளர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.