அரக்கோணம் மதுரை பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது வீட்டின் வெளி பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. நேற்று மாலை கிருஷ்ணவேணி, சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார். கிருஷ்ணமூர்த்தி வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர், கிருஷ்ணமூர்த்தி வீட்டில் நுழைந்தனர். தனியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி சத்தம் கேட்டு எழுந்தார். அங்கு மர்மநபர்கள் நிற்பதை கண்டதும், அலறி கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர், அவரது , கை கால்களை கட்டிப்போட்ட மர்மநபர்கள், பீரோவை திறந்து அதில் இருந்த 400 சவரன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிவிட்டனர். இன்று காலை கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு, வேலைக்கார பெண் சென்றார். அங்கு கிருஷ்ணமூர்த்தி கை, கால்கள் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பதிவான கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இதைதொடர்ந்து பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு அவர்களை தேடி வருகின்றனர். நூற்றுக்கணக்கான சவரன் நகைகளை வைத்துள்ள கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்காமல் இருப்பதால், போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடகு நகைக்கடைக்காரர் வீட்டில் நுழைந்து, அவரை தாக்கி, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நேற்று அதிகாலையில் குடியாத்தம் பகுதியில் சீனிவாசன் என்ற நகை கடை ஊழியரை தாக்கி, மர்மநபர்கள், ரூ.55 லட்சம் நகைகைய கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
