Pavement traders Appeal to the collector with regret to put shops

கோயம்புத்தூர்

ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி நடைபாதை கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டுமென்று கடை போட விடாமல் துரத்தி அடிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் கோயம்புத்தூர் ஆட்சியரிடம் வருத்தத்தோடு மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் ஹரிகரனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்ட நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்தனர். 

அந்த மனுவில், "கோயம்புத்தூர் மருத்துவர் டாக்டர் நஞ்சப்பா சாலையில் நீதிமன்றம் உத்தரவின்பேரில் 125 பேருக்கு பல்வேறு கடைகள் வைக்க இடம் ஒதுக்கி தரப்பட்டது. இதற்கான வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம். 

20 வருடங்களாக கடை வைத்திருந்த எங்களை மேம்பாலம் கட்டுவதாக கூறி கடைகளை காலி செய்ய சொன்னார்கள். காலி செய்த இடத்திற்கு பதில் கோயம்புத்தூர் டாடாபாத் மின்சார வாரிய அலுவலகமிருக்கும் பகுதியில் மாநகராட்சியால் இடம் ஒதுக்கி தரப்பட்டது. 

ரூ.1½ இலட்சம் வரை செலவு செய்து கடையை அமைத்தோம். ஆனால், மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து அந்தக் கடைகளை மீண்டும் காலி செய்துவிட்டனர்.

இப்படி தொடர்ந்து துரத்தி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் நஞ்சப்பா சாலை பேருந்து நிலையம் தமிழ்நாடு உணவகம் அருகில், நஞ்சப்பா சாலை ஞாயிறு சந்தை எதிரில், வ.உ.சி.பூங்கா எதிரே ஆர்.டி.ஓ. ஓட்டுனர் பயிற்சி இடம், சிவானந்தா காலனி பிரதான சாலை உள்பட பத்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி நடைபாதை கடைகளை வைக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் கூறியிருந்தனர்.