மதுரை

சாராயக் கடைகளை மூடியதால், குடிகாரர்கள் சாராயத்தை தேடி ஊருக்குள் அலைகின்றனர். அவர்களின் பலவீனத்தை சாதகமாக்கிக் கொள்ளும் நயவஞ்சகர்கள் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். அவர்களை தீவிரமாக தேடி காவலாளர்கள் கைது செய்கின்றனர்.

தமிழகத்தில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாராயக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன. இதனால் குடிகாரர்கள் கிராம பகுதிகளில் உள்ள சாராயக் கடைகளை நோக்கி சாராயத்திற்காக அலைந்து திரிந்தனர்.

குடிகாரர்களின் பலவீனத்தைப் சாதகமாக்கிக் கொண்டு பலதரப்பினர் சாராயப் பாட்டில்களை வாங்கி பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து மதுரை மாவட்டம் முழுவதும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பேரையூர், சாப்டூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதிகளில் அந்தந்த காவல் நிலையத்திற்கு உள்பட்ட காவலாளர்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பேரையூர் அருகே இருக்கும் மேலப்பட்டியில் திருப்பதி (37) என்பவரும், சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப் பட்டியில் சௌந்திரராஜன் (55), சேடபட்டியில் மலர்மன்னன் (52), டி.கல்லுப்பட்டி கள்ளிக்குடி பிரிவில் நல்லியதேவன் பட்டியைச் சேர்ந்த ராமையா (45) ஆகியோர் அனுமதியின்றி சாராயம் விற்றதை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று, திருமங்கலம் நகர், கூடக்கோவில், சிந்துபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றுப் பணியில் இருந்தனர் காவலாளர்கள்.

அப்போது, கப்பலூர் என்ற இடத்தில் ராஜாமணி (49) என்பவரும், மேல உப்பிலிகுண்டில் வேல்முருகன் (37), கிழவனேரியில் முத்துவீரன் (47), வேப்பனூத்தில் தங்கப்பாண்டி (30) ஆகியோர் அனுமதியின்றி சாராயும் விற்றதால் அவர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து காவலாளர்கள் அதிரடி காட்டினர்.