காவிரி பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் நடத்தும் இரயில் மறியல் போராட்டத்திற்கு, பயணிகள், பயணத்தைத் தவிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம், “காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுகுறித்து உத்தரவிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என மத்திய அரசு பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
எனவே, கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் 48 மணி நேர இரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். இதில் அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்குபெறுவது வரவேற்கத்தக்கது.
காவிரி பிரச்சனை என்பது டெல்டா பகுதிகளுக்கு மட்டுமானதல்ல. தமிழகத்தில் உள்ள 54 நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாழ்வாதாரப் பிரச்சனையாக உள்ளது.
காவிரி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வரவில்லை என்றால் சென்னைக்கு எப்படி குடிநீர் கிடைக்கும்? காவிரி தண்ணீர் இல்லையென்றால் 30 டன் உணவு உற்பத்தி பாதிக்கும். இது ஒட்டு மொத்த தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை.
எனவே அக்டோபர் 17, 18 தேதிகளில் மூன்று மாவட்டங்களில், 300 மையங்களில், இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எனவே, பயணிகள் மேற்கூறிய இரு நாள்களிலும் பயணத்தை தவிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவு தரவேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் மாதவன், துணைத் தலைவர் கற்பனைச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
