திருச்சியில் இருந்து பயணிகள் ரயில் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. சுமார் 11.40 மணியளவில் கரூர் ரயில் நிலையம் வந்தது. ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, ரயிலின் கடைசி பெட்டியின் (கார்டு பெட்டிக்கு முன் உள்ள பெட்டி) மேற்கூரையில் இருந்து திடீரென புகை எழும்பியது. இதையடுத்து, அந்த பெட்டி முழுவதும் தீ பரவும் நிலை ஏற்பட்டது. 
இதைக்கண்ட ரயில் பயணிகள் அலறியடித்து ரயில் நிலையத்தை விட்டு ஓடினார்கள். உடனடியாக ரயில்வே ஊழியர்கள், மேற்கூரையில் கிளம்பிய புகையை அணைத்தனர். இதனால், இந்த கரூர் ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையத்தில் நின்ற பிறகு, ரயிலின் மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டதால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டி சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் 3 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.