கரூர்

கரூரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட தோழமை கட்சியினர் இரயில் வரும்வரை காத்திருந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 200 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.  அதன்படி, தி.மு.க. தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தன்படி  கரூரில் நேற்று தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் காங்கிரசு, கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, 

திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர். கழகம், சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கையில் அவரவர் கட்சி கொடியுடன் கரூர் இரயில் நிலையம் முன்பு திரண்டனர்.

இரயில் நிலைய நுழைவு வாயில் முன்பு கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையில் ஏராளமான காவலாளர்கல் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் இரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி தடுப்புகள் அமைத்திருந்தனர். 

இந்த நிலையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்த முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இருந்தும், தடுப்புகளை தள்ளி அகற்றிவிட்டு போராட்டக்காரர்கள் இரயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்றும், தண்டவாளத்தில் நின்றும் போராட்டம் நடத்தினர். 

அந்த நேரத்தில் இரயில் எதுவும் வராததால் இரயில் வரும்வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி தண்டவாளத்திலும், நடைமேடையிலும் கூடி நின்றனர்.

இந்த நிலையில் கோவை - நாகர்கோவில் பயணிகள் இரயில் பகல் 11.45 மணியளவில் முதலாவது நடைமேடை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இரயிலை மறிக்க கையில் கொடியுடன் ஓடிச்சென்றனர். இதனைக் கண்டதும் என்ஜின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். 

போராட்டக்காரர்கள் இரயில் என்ஜின் மீது ஏறி நின்றும், இரயில் முன்பும் நின்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சிறிதுநேர போராட்டத்திற்கு பின் அவர்களை காவலாளர்கள் அப்புறப்படுத்தினர். அதன்பின் இரயில் புறப்பட்டது. 

இரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவலாளர்கள் கைது செய்து வேன், அரசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதில் 28 பெண்கள் உள்பட மொத்தம் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.