Parole extension for more than a month
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யப்பட்டு அண்மையில் பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இரவு ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் அவர் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது எனவும், ஜோலார் பேட்டை காவல்நிலையத்தில் தினமும் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து பேசி வருகின்றனர்.
பரோலில் வெளி வந்த நாளில் இருந்து நேற்று வரை, 1,657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர். பரோல் காலம் நாளையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மூன்று நாட்களாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலமாகவும் நேரில் சென்று, பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பரோலை நீட்டிக்க வேண்டும் என்றும் மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அற்புதம்மாள் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே ஒரு மாதம் பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
