வீடு, நகை, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தங்களை அனாதையாக்கிவிட்டு சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சொத்துக்களை திரும்ப பெறவும், வயதான தம்பதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, செங்குன்றம், பாடியநல்லூரைச் சேர்ந்த பக்கிரிசாமி (82). இவரின் மனைவி கஸ்தூரி (82). இவர்களுக்கு பார்த்தசாரதி, சேகர், தயாளன் என்ற 3 மகன்களும், உமாதேவி என்ற மகளும் உள்ளனர்.

நடக்க முடியாத மனைவி கஸ்தூரியை, வில் சேரில் அமர வைத்துக் கொண்டு வந்த பார்த்தசாரதி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், தங்களுக்கு வீடு இல்லாமலும், ஆதரவுக்கு ஆள் இல்லாமலும் அனாதையாக இருப்பதாக
கூறினர்.

தங்கள் பிள்ளைகளில் தயாளனை தவிர்த்து மற்ற மூன்று பிள்ளைகளும், சொந்தமாக இருந்த வீடு, பணம் மற்றும் 190 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு, தங்களை அனாதையாக விட்டுவிட்டதாக வேதனையுடன் கூறினர். தங்கள் சொத்துக்களை மீட்டுத்தர வேண்டியும்
அந்த புகாரில் கூறியிருந்தனர்.

இதனை அடுத்து, பக்கிரிசாமி - கஸ்தூரி ஆகியோரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புழல் காவல் நிலையத்துக்கு, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.