சிறுவர்கள் வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மைக் காலமாக, சென்னையில் சிறுவர்கள் பைக் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. சட்டப்படி வாகனத்தை இயக்க இவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனாலும், பெற்றோர் அனுமதியுடன் இவர்கள் வாகனம் ஓட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

வாகனங்களை இயக்குவதோடு, பைக் ரேஸ் செல்வது, சாகசம் செய்வது என்பது போன்ற விஷயங்கள் நடந்து வருகின்றன. ஒரே வாகனத்தில் 3 பேர் செல்வதும் நடந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் பைக்கில் செல்பவர்கள், செல்போன் பறிப்புகளில் செயல்படும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் சிறுவர்களே ஈடுபடுவதாக போலீசார் கூறுகின்றனர்.

எனவே குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களைக் கண்காணிக்கவும், சிறுவர்கள் வாகனம் இயக்குவதை தவிர்க்கவும் சென்னை போக்குவரத்து போலீசார் புதிய அறிப்பை வெளியிட்டுள்ளனர். 

அதில், 18 வயதுக்கு குறைவான சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4 இன் படி 18 வயதுக்கு குறைவான ஒருவர் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.