Asianet News TamilAsianet News Tamil

பொங்கலை முன்னிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பன்னீர் கரும்புகள்; விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்காம்...

Paneer canes which are ready for harvesting for Pongal Possibility to increase prices ...
Paneer canes which are ready for harvesting for Pongal Possibility to increase prices ...
Author
First Published Jan 3, 2018, 10:25 AM IST


விழுப்புரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரத்தில் சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் கரும்புகள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பருவமழையால் ஏற்பட்ட சேதத்தால் இந்தாண்டு கரும்பு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற தை 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காக விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கண்டமங்கலம், வளவனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பன்னீர் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த கரும்புகள் தற்போது நன்கு செழித்து வளர்ந்து, அமோக விளைச்சல் கண்டுள்ளது. ஆறு அடி உயரத்துக்கு மேல் வளர்ந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் இந்தக் கரும்புகளை பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பாக அறுவடை செய்ய முடிவு எடுத்துள்ளனர் விவசாயிகள்.

இதுகுறித்து, விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் பகுதியில் பன்னீர் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியது:

"கடந்தாண்டை விட, நிகழாண்டு பருவமழை நன்கு பெய்ததால் கரும்புகள் செழித்து வளர்ந்துள்ளன. இருப்பினும், பருவமழையின்போது பலத்த காற்று வீசியதால் கரும்புகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், எங்களுக்கு நட்டம் ஏற்பட்டது.

எனினும், விளைந்துள்ள கரும்புகளையாவது அறுவடை செய்து விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளோம். வியாபாரிகளின் வரவைப் பொறுத்து, அறுவடை செய்ய உள்ளோம்.

அதேவேளையில், பலத்த காற்றுக்கு கரும்புகள் சாய்ந்து சேதமடைந்துள்ளதால், இந்த வருடம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்தாண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்தோம். இந்த ஆண்டு கட்டு ரூ.350 வரை விற்பனை செய்தால், மட்டுமே ஓரளவு நட்டத்தை சமாளிக்க முடியும்.

சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்புக்கு முறையாக பணம் வழங்கப்படாததால், தனி நபர்களிடம் கடன் பெற்று பன்னீர் கரும்பை சாகுபடி செய்கிறோம். இந்த வகை கரும்புகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காதபோது, நாங்கள் மிகுந்த நட்டத்தை சந்திக்கிறோம்.

எனவே, அரசு மானியத்தில் எங்களை போன்ற விவசாயிகளுக்கும் கடன் வழங்கினால், பன்னீர் கரும்புகளை அதிகளவில் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios