panchanga predictions about new year 2018
பஞ்சாங்கம் என்பது தமிழ் ஆண்டு கணக்குப் படி, துல்லிய காலக் கணக்கீடுகளால் தயாரிக்கப் படுவது. ஒவ்வொரு அறுபது ஆண்டுகளுக்கும் ஒரு முறை அதன் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். இதற்கென தமிழ்ப் பாடல் வெண்பா வடிவில் உள்ளது.
தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி. இதனை ஹேமலம்ப என்றும் கூறுவர். அடுத்த ஆண்டு விளம்பி வருடம். இந்த விளம்பி வருடம் சித்திரை துவக்கத்தில் இருந்து, அதாவது 2018 ஏப்ரல் 14இல் இருந்து துவங்குகிறது என்றாலும், 2018ஆம் ஆண்டில் ஹேவிளம்பி வருட பஞ்சாங்கத்தில் உள்ள மார்கழி பாதி, தை, மாசி, பங்குனி பலன்கள் தொடரும்.
பஞ்சாங்கத்தில் பழங்காலக் கணக்கீட்டின் படி வெய்யில், மழை, புயல், தண்ணீர்ப் பஞ்சம், வெள்ளம் என இயற்கையின் மாறுபாடுகளைக் குறித்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கணக்கீடுகள் சில நேரங்களில் சரியாக அமைந்தாலும், பல நேரங்களில் பொய்த்துப் போயிருக்கின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பல இயற்கைச் சீற்றங்களை பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்திருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளம், ஓஹி புயல் குறித்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் முன்னெச்சரிக்கையாக இடம்பெற்றிருந்தன. கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பாதிக்கப்படும் என்ற தகவல்கள் முன்னரே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

* ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
* வெப்பம் அதிகம் நிலவும், சாலை விபத்துகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது பஞ்சாங்கம்.
* எல்லைப் பாதுகாப்பு அதிகரிக்கும், புதிய பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப் படும்.
* தீயணைப்பு - போலீஸ் - ராணுவத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* சர்க்கரை, வெல்லம், புளி, மதுபானங்களின் விலை ஏறுமாம்!
* மதுபான விலை ஏற்றம் காண்பதுடன், அதில் அரசு சில சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாம்.
* மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும்.
* மத்திய அரசு புதிய வரி திட்டங்களை விதிக்குமாம்.
* வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
* புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரிடும்.
* தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.

* மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம்.
- இவற்றில் பெரும்பாலானவற்றை 2017ல் நாம் பார்த்து விட்டோம். அதுவே 2018லும் தொடரும் என்ற ரீதியில் பஞ்சாங்கக் கணிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பகீர் கிளப்பும் பல தகவல்கள் பொய்த்துப் போயிருந்தலும், இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நாம் இந்த வருடமும் பார்த்துவிட்டோம் என்பதால், அரைகுறை மனத்துடன் இவற்றை நம்ப வேண்டியுள்ளது.
