முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டும் என அமைச்சர் தலைமையில் நடந்த பால்குட ஊர்வலத்தில், கலந்து கொள்ள வந்தவர், நெரிசலில் சிக்கி பலியானார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது.

காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டாலும், நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்காக ஜெயலலிதா அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது. அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 34 நாட்கள் ஆகிறது. இதையொட்டி, அப்பல்லோ மருத்துவமனை நுழைவாயில் அருகே, அ.தி.மு.க. மகளிரணி சார்பில் காளிகாம்பாள் பூஜை மற்றும் வாராஹி பிரத்யங்கிரா தேவி பூஜை ஆகியவை நடத்தப்பட்டது.

இதில், ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், கேரள மாநில கொல்லத்தில் பகவதியம்மன் கோவிலில் இருந்து வந்த நம்பூதிரிகள் குமார், ரிஷிகேஷ் ஆகியோர் பகவதி பூஜை நடத்தினார்கள்.

இந்நிலையில் சேலத்தில் நேற்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பால்குட ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி சேலத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், பால்குட ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.

பால்குடத்தை ஏந்தி செல்வதற்காக ஒவ்வொருவராக அழைத்தனர். அப்போது, கூட்டம் அதிகரித்து, குடத்தை வாங்குவதற்கு முந்தி சென்றதால், நெரிசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் சிக்கி மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த நபர் வரும் வழியிலேயே இறந்ததாக கூறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டும் என பால்குட ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன், திருவண்ணாமலையில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் மூதாட்டி ஒருவர் பலியானார். 16 பெண்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.