பாளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சிறைச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சுதபற்பநல்லூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன் இசக்கி முத்து, தனது ஒரு வயது குழந்தையை கல்லில் வைத்து கட்டி, குளத்தில் வீசி கொலை செய்தார். 

இதுதொடர்பாக நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இசக்கிமுத்துவை, பாளையங்ககோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை பாளை சிறைச்சாலை, விசாரணை சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், நேற்று மாலை, சிறை காவலர்கள், சிறைச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விசாரணை சிறையில் உள்ள ஒரு அறையில், இசக்கிமுத்து தூக்குப்போட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து உயர் அதிகாரிகள் அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.