பழனி  அருள்மிகு தண்டபாணி திருக்கோவில்  நவபாஷாண மூலவர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது  தற்போது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர் உருவாக்கினார் என்பது வரலாறு.

அந்த சிலை சேதமடைந்துவிட்டதால் அதே போல் புதிதாக ஐம்பொன் சிலை ஒன்று கடந்த 2003-2004-ம் ஆண்டு செய்யப்பட்டது. அந்த சிலையை பிரபல சிற்பி முத்தையா ஸ்தபதி செய்துள்ளார். அந்த சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில், சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசேஷ கோர்ட்டில் அவர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நவபாஷாண மூலவர் சிலையை அகற்றுவது போன்று அகற்றிவிட்டு, அதை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.