பழனியில் முறைதவறி சித்தப்பா மகளை ஒரு தலையாய் காதலித்த அண்ணன், தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து பிளேடால் அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம்  பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்த பவித்ரா நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் இளைஞர் ஒருவருடன் ஆட்டோவில் சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிச்சென்றார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் மற்றும் சிலர் பவித்ராவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து  போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. பவித்ராவை பிளேடால் அறுத்துக் கொலை செய்தவர் , நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாயவன்  என்பதும், அவர் பவித்ராவின்  பெரிய்ப்பா மகன் என்பதம் தெரியவந்தது.

மாயவன் பவித்ராவுக்கு அண்ணன் உறவுமுறை கொண்டவர். ஆனால்  மாயவன் கடந்த சில ஆண்டுகளாக பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பவித்ராவிடம் அவர் அதுகுறித்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பவித்ராவுக்கு  வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த மாயவன் பவித்ராவிடம் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரை தனிமையில் சந்தித்த மாயவன், தனது காதலை பவித்ராவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை பவித்ரா ஏற்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக கூறி பவித்ராவை ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாயவன் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றார் என போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி அருகே மாயவனை போலீசார் கைது செய்தனர். முறை தவறிய காதலால் ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.