விடாத பெரிய கருப்பா..! களத்தில் இறங்கிய அந்த சிறுமி..வீர தமிழச்சி பட்டம் கொடுத்து பாராட்டிய கமிட்டி..
பொங்கல் இரண்டாம் நாளான இன்று பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் சீறி பாய்ந்த தனது காளையை உற்சாகப்படுத்த களத்தில் இறங்கிய சிறுமி ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று, இன்று முறையே நடைபெற்றது.இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 7 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிகட்டு போட்டிகளும் அதிக காளைகளை பிடித்து இவர் முதல் பரிசை வென்றிருந்தார். தற்போது முன்றாவது முறையாக முதலிடம் வென்ற அவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ சார்பில் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிவகங்கைச் சேர்ந்த புலியூர் சூளிவலி காளை சிறப்பாக களமாடியதால் அதன் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இது தவிர கடிகாரம், வெள்ளிக்காசு, தங்கக்காசு, பீரோ, பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களும் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் இரு காவலர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் களமிறக்கப்பட்டன.
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது. அதன்படி அன்னலட்சுமி என்ற சிறுமியின் காளை சிறப்பாக களமாடியது. அந்த காளை நண்பகல் வாக்கில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. காளையின் உரிமையாளரான அவர், தில் இருந்த என் மாட்டை தொட்டுப்பாருங்க என சவால் விடும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் இறங்கி தனது துப்பட்டாவை சுழற்றி, காளைமாட்டை உற்சாகப்படுத்தினார். அந்த சிறுமியின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இளம்பெண்ணின் துணிச்சலை கண்ட ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் அன்னலட்சுமிக்கு வீரத்தமிழச்சி என பட்டம் சூட்டினர்.
வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த அன்னலட்சுமியின் பெரிய கருப்பன் என்ற காளை வெற்றி பெற்றதோடு ஏர் கூலரையும் பரிசாக வென்றுள்ளது. மேலும், அமைச்சர் மூர்த்தி அந்த சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தார். ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், காளையின் உரிமையாளரான அன்னலட்சுமியை அழைத்து ஏர்கூலர், நாற்காலி, அமைச்சர் வழங்கிய தங்கக்காசு என பரிசுகளை அள்ளிக் கொடுத்தனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த பெரிய கருப்பனுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் களத்தில் இறங்கிய சிறுமி அன்னலட்சுமி துணியை சுற்றி மாடுபிடி வீரர்கள் மத்தியில் உற்சாகப்படுத்தினார்.சிறுமியின் இந்த உற்சாகம் மிகுந்த வீரச்செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.