Oviya met the sweet shop owner
பிக்பாஸ் நிகழ்ச்சி வாக்கெடுப்பில், தனக்கு ஆதரவு கோரிய ஸ்வீட் கடை உரிமையாளர் ஒருவரை நடிகை ஓவியா நேரில் சென்று நன்றி தெரிவித்தார். நடிகை ஓவியாவின் வருகையால் ஸ்வீட் கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ந்தனர்.
விஜய் தொலைக்காட்டியில் நடிகர் கமல் ஹாசன், தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரை பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறப்பட்டது. நடிகை ஓவியாவுக்கு, சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு பெருகியது. அது மட்டுமல்லாது ஓவியா ஆர்மி என்ற பெயரில் தனிக்குழுவே இருந்தது.
அதேபோல், சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீதில் ஓவியாவுக்கு வாக்கு கேட்டு வாசகம் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இது குறித்து கடையின் உரிமையாளர் ஜோதி பிரகாஷ், என் கடை ரசீதில் சமூக அக்கறையுள்ள வாசகங்களை நான் தொடர்ந்து அச்சிட்டு வருவதாகவும், விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நீரை சேமியுங்கள் என்று அச்சிட்டபோது யாரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஓவியாவுக்கு வாக்களியுங்கள் என்ற வாசகத்தால், எனக்கு பல இடங்களில் இருந்து அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்
என்று கூறியிருந்தார்.

கடை ரசீதில் ஓவியாவுக்கு வாக்களிக்களியுங்கள் என்று அச்சிடப்பட்டதை தொடர்ந்து, ஜோதி பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை ஓவியா திடீரென, ஸ்வீட் கடைக்கு வருகை புரிந்தார். நடிகை ஓவியாவின் வருகையை கண்டு ஜோதி பிரகாஷ் இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஓவியாவை தன் கடைக்கு அழைத்து சென்று உபசரித்த, ஜோதி பிரகாஷ், தன் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து ஓவியாவுடன் சேர்ந்து புகைப்படமும்
எடுத்துக் கொண்டார்.
