Original mersal doctor in north madras

மருத்துவம், கல்வி போன்றவை சேவையாக ஒரு காலத்தில் செய்யப்பட்ட நிலையில், அது இன்று வியாபாரமாக்கப்பட்டு விட்டது. ஆனால், அதை இன்னும் சேவையாக ஒரு சிலர் மட்டுமே செய்து அது சேவைதான் என உலகிற்கு உணர்த்தியும், உயிரும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட குடிசைவாழ் மக்கள் வாழும் வடசென்னையில் 2 ரூபாய்க்கு இன்னும் சிகிச்சை அளித்து வருகிறார் திருவேங்கடம் வீரராகவன்.

சமீபத்தில் வெளியான விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் 5 ரூபாய் டாக்டரைக் காட்டிலும் மிகக் குறைவான தொகையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் திருவேங்கடம் தான் உண்மையில் ‘மெர்சல் டாக்டர்’ என எண்ணத் தோன்றுகிறது.

67 வயதான டாக்டர் திருவேங்கடம் வீரராகவன், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் டாக்டர் படிப்பு முடித்தவர். டாக்டர் படிப்பு முடித்து கடந்த 1973ம் ஆண்டில் இருந்து ஏழை மக்கள் அதிகம் இருக்கும்வியாசர்பாடி மக்களுக்கு ரூ.2 கட்டணத்தில் இன்றுவரை மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.

இவர் நோயாளிகளிடம் ரூ.2 கட்டணம் வசூலிப்பதைப் பார்த்து மற்ற மருத்துவர்கள் திருவேங்கடத்துக்குஎதிர்ப்பும், கண்டனமும் கூட தெரிவித்துள்ளனர். திருவேங்கடம் குறைந்தபட்சம் மக்களிடம் ரூ.100 கட்டணம் வசூலிக்க மற்ற மருத்துவர்கள் கூறியும் அவர் அதற்கு மறுத்து விட்டார்.

டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் அளித்த பேட்டியில், “ நான் எந்த செலவும் இல்லாமல் டாக்டர் படிப்பு படித்தேன். அதற்கு முன்னாள் முதல்வர் காமராசரின் கொள்கைகளுக்கும், அவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். நானே கட்டணம் செலுத்தி படிக்காதபோது, என்னிடம் வரும் நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் அதிகமாக வசூலிப்பதில்லை.

நான் பிறந்தது வளர்ந்து எல்லாம் வியாசர்பாடியில் தான். கடந்த 1973ம் ஆண்டில் இருந்து இங்குதான் இருந்தேன், ஆனால், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இங்கிருந்து வெளியேறினேன். இந்தவியாசர்பாடியில் வாழும் குடிசை வாழ் மக்களுக்காக ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், என் உயிர் இருக்கும் வரை அவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்றார்.

இந்த வயதிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை எருக்கஞ்சேரியிலும், அதன்பின் வியாசர்பாடியிலும்நோயாளிகளைச் சந்தித்து திருவேங்கடம் சிகிச்சை அளித்து வருகிறார். சென்னை மருத்துவக் கல்லூரியில் தொழுநோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது, அவர்களுக்கு எப்படி மருந்துகள் இடுவது என்பது குறித்துதிருவேங்கடம் சிறப்பு பயிற்சியும் எடுத்துள்ளார்.

இவருடன் டாக்டர் படிப்பு படித்தவர்கள் இன்று வெளிநாடுகளில் சொகுசாக குடும்பத்தாருடனும், பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இன்றும் திருவேங்கடம் ஏழைமக்களுக்காக சேவை செய்து வருகிறார்.

திருவேங்கடத்தின் நெருங்கிய நண்பரும் டாக்டருமான ஒருவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சக்கணக்கான ஊதியத்தில் மீண்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், திருவேங்கடம்எங்கும்வேலைக்கு செல்லவில்லை.

திருவேங்கடத்தின் மனைவி சரஸ்வதி ரெயில்வேயில் பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார். இவரின் மகன் டி. தீபக், மகள் டி ப்ரீத்தி ஆகியோர் மொரீசியஸ் நாட்டில் டாக்டர் படிப்பு படித்து வருகின்றனர்.

தன்னுடைய பிள்ளைகள் படிப்பு முடித்து நாடு திரும்பியபின், தனது கனவான சொந்த மருத்துவமனையைதான்பிறந்த வளர்ந்த வியாசர்பாடியில் கட்டிவிடலாம் என்ற நினைப்புடன் திருவேங்கடம் உலாவருகிறார். 

ஏன் வியாசர்பாடியில் கட்டுகிறீர்கள் என்று திருவேங்கடத்திடம் கேட்டபோது, “ நான் பிறந்து, வளர்ந்த இடத்தை தவிர்த்து வேறு எங்கு மருத்துவமனை கட்டுவது? அங்குள்ள ஏழை மக்களுக்காக மீண்டும் எனது இலவச சேவையைத் தொடங்கத்தான் அங்கு கட்டப்போகிறேன்’’ என்கிறார்.

மனுசன்னா.. இப்படித்தான்யா இருக்கனும்... மெர்சலாக்கிட்டார்....