வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்
வங்கக்கடல் பகுதியில் இன்று புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 17, 18ம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் வழக்கத்தை விட கூடுதலான மழைப் பொழிவு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மழையின் வீரியம் அதிகமாக உள்ளது. குறிப்பாக முந்தைய வாரம் கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைப் பொழிவு பதிவானது.
இதனைத் தொடர்ந்து உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நீர்நிலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிதாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அது இன்று உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 17 மற்றும் 18ம் தேதிகளில் 20 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.