Ops speech in salem
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மாட்டோம்… ஆனால் கலைக்கும் சூழ்நிலையை இபிஎஸ் அணியினரே உருவாக்கிவிடுவார்கள்…அதிரடி ஓபிஎஸ்…
தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் எங்களால் உருவாகாது என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினரே அதற்கு காணமாக அமைந்து விடுவார்கள் தான் எண்ணுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலும் உருவாகவில்லை.
ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க பழனிசாமி அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர்.
இதுபோன்று இரு அணியினரும் மாறி மாறி பேசி வருவதால் இழுபறி நீடித்து வருகிறது. அணிகள் இணைப்புக்கான சாத்தியம் தற்போது இல்லாத சூழ்நிலையில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.

காஞ்சிபுரத்தில் தொடங்கிய இந்த சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் முடிவடைகிறது ,
இந்தப் பயணத்தின் போது, ஜூலை மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அதில் போட்டியிடுவது பற்றியும் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 5 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கொருக்குப் பேட்டையில் தனது முதல் சுற்றுப்பயண கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார். இதனைத் தொடர்ந்து சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் உரையாற்றினார்.

அப்போது தங்களது தர்மயுத்தம் வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது என்றும் விரைவில் வெற்றி கிடைக்கும்என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலரும் என்றும். தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் எங்களால் உருவாகாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி அணியினரே ஆட்சியை கலைப்பதற்கு காரணமாக அமைந்துவிடுவார்கள் எனவும் அவர் கூறினார்
அதே நேரத்தில் ஆட்சியை 122 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தத்தி தத்தி நடத்திவிடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் என்றும் ஆனால் அது முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தலைமை செயலகம் செயலிழந்துவிட்டது… வளர்ச்சித்திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை …. வளர்ச்சி திட்டங்களை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுத்து இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கியா மோட்டார்ஸ் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்குமா என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நிலையை தடுக்க முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டினார்.
