Ops narpani mandram will open shortly

உதயமாகிறது ஓபிஎஸ் நற்பணி மன்றம்….நடிகர்களை பின்பற்றி இளைஞர்களை கவர திட்டமா?

அதிமுக தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் ஓபிஎஸ் நற்பணி மன்றம் தொடங்கவுள்ளதாக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் என இரண்டாக பிளவு பட்டுள்ளது.

ஆனால் பொதுச் செயலாளர்க தேர்வு செய்யப்பட்ட சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இரு தரப்பு தலைவர்களும் முரண்பட்ட விதத்தில் இருந்ததால் அது தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட சென்னையில் ஒ.பி.எஸ் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்க அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அவரது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நற்பணி மன்றம் மூலம் இளைஞர்களையும், மாணவர்களையும் ஓ.பி.எஸ்.அணிக்கு கொண்டுவந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை மேலும் பலபடுத்த திட்டம் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ் நற்பணி மன்றம் வரும் 18 அல்லது 19 ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த திறப்பு விழாவில் கே. முனுசாமி, மா.பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.