opposition for Green ways road woman threatens pour fire herself
தருமபுரி
தருமபுரியில் பசுமை வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துவிடுவேன் என்று வருவாய்த்துறை அலுவலர்களை பெண் ஒருவர் மிரட்டினார்.
சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் பலத்த காவல் பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலமேலுபுரம் பகுதியில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்வதற்கு காவலாளர்கள் பாதுகாப்புடன் சென்றனர். அப்போது காளிப்பேட்டையைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ஜெயாவுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் முயன்றனர்.
இதற்கு ஜெயா மற்றும் அவருடைய மகன் மணிவண்ணன், மாமியார் மலட்சியம்மாள் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ஜெயா, "தனது நிலத்தை அளவீடு செய்தால் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிப்பேன்" என்று கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை காட்டினார்.
இதேபோல அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், சுகுமார், விமலா ஆகியோரும் அவர்களுடைய நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உடலில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், நிலத்தில் கருப்பு கொடி கட்டியும் வைத்திருந்தனர். இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்யாமல் சென்றுவிட்டனர்.
பசுமை வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தியாய் பரவியது.
