கிருஷ்ணகிரி
 
கிருஷ்ணகிரியில், 250 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு ஒரேயொரு ஆசிரியர் இருப்பதால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி அரசு பள்ளி மாணவ - மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது தொட்டமஞ்சி மலைக் கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில் வெறும் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். அதிலும் ஒரு ஆசிரியை பணி மாற்றம் செய்யப்பட்டதால் மாணவிகளுக்கு பாடம் நடத்த ஆசிரியரே இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் எடுபடாத நிலையில், "கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி நேற்று மாணவ - மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அம்மாணவர்களின் பெற்றோரும், "கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வகுப்பறைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் இறங்கினர்.

இப்போராட்டம் குறித்து தகவலறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு வந்து மாணவ - மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள், "பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் எங்களின் கல்வி பாதிக்கிறது" என்று கூறினர்.

அதற்கு கல்வி அலுவலர், "கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். 

இதனையேற்று மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். தங்களுக்கு ஆசிரியர் வேண்டும் என்று மாணவ - மாணவிகளே நடத்திய இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.