Presumably the government raised prices across the bus

“இனி சாதா பஸ் இல்லை... ஒன்லி எக்ஸ்பிரஸ்தான்...” திடீர் பஸ் கட்டண உயர்வு . எடப்பாடி அரசின் மறைமுக நடவடிக்கை
தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக சாதாரண பஸ்கள் அனைத்தும், எஸ்க்பிரஸ் பஸ்களாக இயக்கி, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அரசின் இந்த மறைமுக விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு கஜானாவில் இருப்பு இல்லை. இதனால், வரிகளை கூடுதலாக அரசு வசூலித்து வருகிறது.
இதையொட்டி வாட் வரியை கூடுதலாக்கி, வசூலிக்க தொடங்கிவிட்டது. இதற்காக நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு மறைமுகமாக பஸ் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளது. இதனால், மக்களின் அடிப்படை தேவையான பொருட்களின் விலையில் உயரும் அபாயம் உள்ளது. இதில் பாதிக்கப்படுவது பாமர மக்கள் மட்டுமே.
தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களில் சாதாரண கட்டணம், விரைவு கட்டணம், சொகுசு கட்டணம் என 3 வகையாக பிரித்து வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ்சுக்கு ரூ.3, விரைவு பஸ்சுக்கு ரூ.5, டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.7 என குறைந்த கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாதாரண பஸ்கள் இயக்கப்பட்டன. இவை 700 என குறைத்து இயக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் 120 பஸ்களாக குறைக்கப்பட்டுவிட்டன. அதில் 630 பஸ்களை சாதாரண பஸ்களில் இருந்து, விரைவு பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. 
இதனால், சாதாரண பஸ்கள் அனைத்தையும், எக்ஸ்பிரஸ் பஸ்களாக மாற்றி, குறைந்தபட்ச கட்டணம் ₹5 என வசூலிக்க தொடங்கிவிட்டனர். 
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணிமனையிலும் ஒவ்வொரு வழி தடத்துக்கும் சுமார் 10 சாதாரண பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது, 3 சாதாரண பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
அதிலும், சாதாரண பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும். ஆனால், விரைவு பஸ்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிறுத்தப்படுகிறது. இதனால், சாதாரண பஸ்களில் பயணம் செய்வதற்காக காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அனைத்து பஸ்களும் விரைவு பஸ்களாக மாற்றினால், மக்களின் அத்தியாவசி தேவை, இயல்பு வாழ்க்கை அனைத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் என இயங்கி வந்தாலும், பெரும்பாலான வழித்தடங்கலுக்கு மாநகர பஸ்களையே மக்கள் நம்பி இருக்கிறார்கள்.
இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் சாதாரண பஸ்கள் அனைத்தும் விரைவு பஸ்களாக மாற்றப்பட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.