விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 423 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 3 இலட்சத்து 30 ஆயிரத்து 423 குழந்தைகளுக்கு போலியோச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த முகாம் விழுப்புரம் கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

“விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 859 மையங்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 423 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளில் சுகாதாரத்துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.

மேலும், இந்தப் பணிகளில் 9 ஆயிரத்து 504 பணியாளர்களும், 352 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 12 சிறப்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டனர்” என்று ஆட்சியர் சுப்பிரமணியன் பேசினார்.

இந்த முகாமில் துணை இயக்குனர்கள் (சுகாதாரப்பணிகள்) சௌண்டம்மாள், ஜெமினி, சுகாதார மனித வள மேம்பாட்டு நிறுவன முதல்வர் மருத்துவர் கீதா, இந்திய மருத்துவக்கழகம் மருத்துவர் நேரு, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சசிகலா மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர்.