Only 363 people were at work to be abolished in the state ... !!! There is no use ban

மனிதக் கழிவை மனிதர்கள் அகற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்த போதிலும், இன்னும் 13 மாநிலங்களில் 12 ஆயிரத்து 700 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் அவையில் கேள்வி நேரத்தின் போது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசுகையில், “ மனிதக்கழிவை மனிதர்கள் அகற்ற 2013ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. இருந்தபோதிலும், 13 மாநிலங்களில் இன்னும் 12 ஆயிரத்து 737 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொழில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு நிதி உதவியும், திறன்மேம்பாட்டு பயிற்சியும் மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. மனிதக்க ழிவை மனிதர்களே அகற்றும் பணியை குறைக்க ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கான நவீன எந்திரங்களை புகுத்தி வருகிறோம்.

இன்னும் நாட்டில் 26 லட்சம் உலர் கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை ஒழிக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எங்கு உலர் கழிப்பறை செயல்படுகிறதோ அதைச் சுட்டிக் காட்டினால், அதை களைய தேவையான உதவிகளை மாநில அரசுகளுக்கு வழங்குவோம்.

மனிதக்கழிவை அகற்றும் பணியில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 ஆயிரத்து 301 தொழிலாளர்களும், கர்நாடகாவில் 737 பணியாளர்களும், தமிழகத்தில் 363 தொழிலாளர்களும், ராஜஸ்தானில் 322 பேரும், ஒடிசாவில் 237 பேரும், அசாமில் 191 பேரும், பீகாரில் 137 பேரும் இருக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.