குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டும் பட்டாசுகளை இனி ஆன்லைனில் விற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவின் பட்டாசு தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வது விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, திருத்தங்கல், முதலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்தான். இங்கு சிறிதும் பெரிதுமாக பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூலம் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுமட்டுமன்றி தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுகின்றன. 

முன்பெல்லாம் தீபாவளி சீசன் வந்துவிட்டாலே சிவகாசிக்கு நேரில் சென்றும், தங்கள் ஊரில் உள்ள பட்டாசு டீலர்களிடம் சென்றும் பட்டாசு வாங்குவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், கடந்த 5 வருட காலமாகவே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆன்லைன் பட்டாசு விற்பனை நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பட்டாசுகளை வாங்குவோரின் எண்ணிக்கை கிட்டதட்ட 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வகையில் ஆன்லைன் பட்டாசுகளால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிற என்று கூறி பட்டாசு விற்பனையாளர் சங்கத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் ஆன்லைனில் பட்டாசுகளை அனுப்புபவர்கள், வெடிப்பொருள் விற்பனைக்கான எந்தவொரு விதிமுறையையும் பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி ஆன்லைன் விறப்னையால் இத்தொழிலை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான சிறு-குறு மற்றும் பெரிய வியபாரிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

பட்டாசு வியாபாரிகள் சங்க சார்பு வாதத்தையும், உற்பத்தியாளர்களின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ஆன்லைனில் விற்பனையாகும் பட்டாசுகள் கொரியரில் அனுப்பும்போது கடைப்பிடிக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி 15 ஆம் தேதிக்குள் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆன்லைன் பட்டாசு விற்பனை மூலம், கோடிக்கணக்கில் லாபம் பார்த்தவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பேரிடியாக இறங்கியுள்ளது.