தஞ்சாவூர்

ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணியை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கதிராமங்கலத்தில் 30-வது நாளாக நேற்று மக்கள் காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வுப் பணிக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் கசிந்தது. இதனைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவலாளர்கள் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட பத்து அடாவடியாக காவலாளர்கள் கைது செய்தனர்.

இதனைக் கண்டித்து கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் கதிராமங்கலம் மக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம், காத்திருப்பு போன்ற பலவிதமான போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களின் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பேராசிரியர் ஜெயராமன் உட்பட எட்டு பேருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் தர்மராஜன், ரமேஷ் இருவருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்குப்பதிவில் அவர்களது பெயர் தவறாக உள்ளதால் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஐயனார் கோவில் திடலில் 30-வது நாளாக இந்தக் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி என்ற பெண், “மக்களுக்காக போராடியவர்கள் மீது பொய் வழக்கு போட்டது தவறானது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வு பணியை நிறுத்த வேண்டும். இதற்காக தான் போராடுகிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.