தஞ்சாவூர்

300 நாட்களுக்கு மேலாக போராடிவரும் கதிராமங்கலம் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று என்று தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் உள்ள வணிகர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ஜெயபால், துணைத் தலைவர்கள் மனோகரன், சண்முகம், ஆலோசகர் துரைராஜ், நிர்வாகிகள் குமரேசன், ராமச்சந்திரன், அழகுசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில், "மே மாதம் 5–ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் வணிகர் தின மாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து வணிகர்களும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும். 

இந்த மாநாட்டை வணிகம், விவசாயம் மற்றும் சுய தொழில்கள் மீட்பு மாநாடாக நடத்த முன்வந்த மாநில தலைவர் வெள்ளையனுக்கு நன்றி தெரிவிப்பது.

தஞ்சை மாநகராட்சியில் சேவை வரி, குப்பை வரி போன்றவரிகளை வணிகர்களிடையே திணிப்பதை கைவிட வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும்  மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக தடை செய்து விவசாயத்தை காக்கவேண்டும்.

கோவில்களில் வைத்துள்ள கடைகளை அகற்றும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டிப்பது. இதனால் பல இலட்சம் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். 

300 நாட்களுக்கு மேலாக போராடி வரும் கதிராமங்கலம் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும்.

வணிகர் தின மாநில மாநாடு தொடர்பாக, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் அடுத்த மாதம் 3–ஆம் தேதி வெள்ளையன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பழனிச்சாமி, ரவிச்சந்திரன், பெருமாள், சுப்பிரமணியன், காசிநாதன், ராமசிவன், காசிபாண்டியன், செல்வகுமார், நகர தலைவர் சேதுராமன், பொருளாளர் கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றித் தெரிவித்தார்.