விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து பகுதியில்  சிக்கியவர்களை மீட்க மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டாசு ஆலையில் தொடரும் விபத்துகள்

விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதியில் கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான விபத்துகள் மருந்துக் கலவையின்போது தான் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்தினைத் தடுக்க தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை சென்று, மருந்துக் கலவை மேற்கொள்ளும் பணி தகுதி வாய்ந்தவர் முன்னிலையில் நடைபெறுகிறதா என்பதையும், அந்தப் பணியை செய்யும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள ஆய்வு செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மருந்து கலவையின் போது விபத்து

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பதற்காக 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த அறையில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது சாத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராமல் மருந்துகள் மீது உராய்வு ஏற்பட்டதால் மருந்து வெடித்து தீப்பபற்றியுள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கிய விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளார். 

ஒருவர் பலி- பலர் காயம்

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பட்டாசு ஆலையில் எரிந்து கொண்டிருந்த தீயை பெரும் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதனையடுத்து விபத்து பகுதியில் சிக்கி இருந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்த்தனர். பட்டாசு ஆலையில் மீண்டும் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.