நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மக்கள் அதிகளவில் கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், கோயில்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணை பகுதியில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி 3 பேர், அங்கு சுற்றி திரிந்தனர்.

போலீசாரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பிவிட்டனர். பிடிப்பட்ட ஆசாமியை சோதனை செய்தபோது, அவரிடம் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், எதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றி திரிந்தனர். யாரையாவது கொலை செய்ய திட்டமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.