On June 20th a shop chain decided to conduct a human chain with family

கடலூர்

மாற்று வேலை வழங்கக் வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் ஜூன் 20-ல் திருச்சியில் குடும்பத்துடன் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக செயற்குழு கூட்டத்தில் அறிவித்தனர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடலூரில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மு.கு.பழனிபாரதி, பொருளாளர் ஜெய்கணேஷ், துணைத் தலைவர்கள் கு.சரவணன், ராமலிங்கம், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் குறித்து கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

“தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்து 500 சாராயக் கடைகள் செயல்பட்ட நிலையில் அரசின் கொள்கை முடிவால் ஆயிரம் கடைகளும், உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் 3 ஆயிரத்து 321 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேக்லை இழந்துள்ளனர்.

எனவே, “அவர்களுக்கு மாற்றுப் பணியாக தற்போது செயல்படும் கடைகளில் பணி வழங்க வேண்டும் அல்லது அரசுத் துறையில் வெறுமையாக உள்ள பணியிடங்களில் கல்வித் தகுதி, பணிமூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

இதுகுறித்து மாநில டாஸ்மாக் சாராயக் கடை நிர்வாகம் உத்தரவிட்டும் அதை சில மாவட்ட மேலாளர்கள் செயல்படுத்த மறுப்பது கண்டனத்திற்குரியது.

பணிமூப்பை வேலையில் சேர்ந்த நாள் முதலே கணக்கிட வேண்டும்.

நிர்வாக ரீதியாக வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெற்றிருந்தால் பணியில் சேர்ந்த நாளையே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் சேர்க்கப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி நியாயமாக வழங்க வேண்டி பணப் பலன்களை வழங்க வேண்டும்”

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 20-ஆம் தேதி திருச்சியில் பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும்” என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைப்புச் செயலர் காமராஜ், பிரசாரச் செயலர் எம்.கோதண்டம், துணைச் செயலர் கோவிந்தராஜ், தலைமை நிலைய செயலர் ரமேஷ், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், கோபால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.