Omni bus seized with motorbike register number

சேலம் 

மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை வைத்து சேலம் - கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்ட ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு டி.என்.பி.பி.2288 என்ற பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து ஒன்று பேருந்தின் பெயர் எதுவுமின்றி பயணிகளை ஏற்றுவதாகவும், அந்த ஆம்னி பேருந்து மீது சந்தேகமுள்ளதாகவும் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தகவல் வந்தது. 

அதனைத் தொடர்ந்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் சென்னை செல்ல தயாராக இருந்த ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர். அப்போது, அங்கு கோயம்புத்தூருக்கு புறப்பட தயாராக நின்ற ஆம்னி பேருந்து ஒன்றை சோதனையிட்டனர். 

ஆம்னி பேருந்தின் பதிவெண்ணை ஆய்வு செய்ததில், அது மோட்டார் சைக்கிளுக்கான பதிவெண் என்பது தெரியவந்தது. மேலும், வாகனத்துக்கான குறியீட்டு எண்ணை ஆய்வு செய்தபோது, அது ஆந்திர மாநிலத்தில் உள்ள வாகனத்தின் எண் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஆம்னி பேருந்துக்கான ஆவணங்களை சரிபார்த்தபோது, அத்தனையும் போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டுச் சென்றனர்.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன்,“பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை வைத்து தற்காலிகமாக இயக்கி வந்துள்ளனர். 

ஆம்னி பேருந்தின் உரிமையாளர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆம்னி பேருந்தை விலைக்கு வாங்கி, அதை உரிய முறையில் பதிவு செய்யாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ஆம்னி பேருந்தை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.