சென்னையில் வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1253 என்ற எண்ணை, கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
சென்னை நகரில், மாநகர கமிஷனர் உத்தரவின்படி வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அந்த திட்டத்தின்கீழ் உரிய பாதுகாப்பு வசதி கேட்டு வீடுகளில் தனியாக வசிக்கும் 4 ஆயிரத்து 600 முதியோர்கள் தங்களது பெயர்களை, அவர்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர்களின் வீடுகளில் போலீஸ் பட்டா பாஸ் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. தினமும் ரோந்து போலீசார் இவர்களின் வீடுகளுக்கு சென்று ஏதாவது உதவி தேவையா? என்று கேட்டுவிட்டு வருவார்கள். பட்டா பாஸ் புத்தகத்திலும் கையெழுத்து இடுவார்கள்.
இந்த திட்டம் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டத்தில் வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்கள் தங்களது பெயர்களை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யலாம். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு உதவி மையம் செயல்படுகிறது.
இந்த பாதுகாப்பு உதவி மையத்துக்கு ‘1253’ என்ற இலவச தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசினாலே, போலீசார் உடனடியாக உதவிக்கு வருவார்கள். இந்த தொலைபேசி எண்ணில் தினமும் ஏதாவது உதவி கேட்டு 75 பேர் பேசுகிறார்கள்.
இவ்வாறு பேசும் முதியோர்களில் பெரும்பாலானோர் மருத்துவ உதவி கேட்கிறார்கள். வெளியில் செல்வதற்கு வாகன வசதி செய்துதரவேண்டியும் உதவி கேட்கிறார்கள். உடனடியாக அவர்கள் கேட்கும் உதவிகளை போலீசார் செய்து தருகிறார்கள்.
முதியோர்களுக்கான பாதுகாப்பு உதவி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எஸ்ஐ ஒருவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தினமும் முதியோர் பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வார். உயர் போலீஸ் அதிகாரிகளும் அவ்வப்போது இதை ஆய்வு செய்யுமாறு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்கள், இந்த திட்டத்தில் சேர்ந்து போலீசாரிடம் தேவையான உதவிகளை கேட்டு பெறலாம் என்றார்.
