Ola cab driver arrested for misbehaving with woman passenger in Hyderabad

ஹைதராபாத்தில் ஓலா வாடகை காரில் பயணம் செய்த பெண் பயணியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநரை ராசகொண்டா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் கௌலிபாடி என்ற இடத்திலிருந்து லிங்கம்பள்ளி என்ற இடத்திற்கு செல்வதற்காக இளம்பெண் ஒருவர், பலருடன் ஷேர் செய்து செல்லும் ஓலா வாடகை காரில் புக் செய்துள்ளார்.

அவருடன் மேலும் இரண்டு பயணிகளும் சென்றுள்ளனர். மற்ற இரண்டு பயணிகளும் வழியிலேயே இறங்கிவிட, அந்த பெண் மட்டும் பயணம் செய்துள்ளார். காரில் யாரும் இல்லாததால் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் ஓட்டுநர் தவறாக நடந்துகொண்டுள்ளார். மேலும் அந்த பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் வழி மாறி வேறு பாதையில் சென்றுள்ளார். 

இதனால் அச்சமடைந்த அந்த பெண், காருக்குள் இருந்து கூச்சலிட பயந்துபோன கார் ஓட்டுநர், அந்த பெண்ணை அரம்கார் என்ற இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்ற அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த ஓட்டுநரின் மொபைல் எண், காரின் பதிவு எண் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதை வைத்து அந்த ஓட்டுநரை தேடிய போலீசார், சிவா என்ற 22 வயது ஓட்டுநரைக் கைது செய்தனர்.