நாகை அருகே ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

இங்கிருந்து குத்தாலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு பைப் லைன் மூலம் எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. 

இந்த நிலையில், மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் அருகே எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் இதுவரை 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.