திருநெல்வேலி

திருநெல்வேலியில் மக்கள், சாராயக் கடையை மூட வேண்டும் என்று காந்தியடிகள் மற்றும் காமராசர் உருவபடத்திற்கு சூடம்காட்டி வழிபாடு நடத்தி வேண்டிக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்துக்கு உள்பட்ட வெங்கடாம்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மூடப்பட்ட சாராயக் கடைகளை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடாம்பட்டியில் உள்ள சாராயக் கடையையும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயல்கிறது.

இதனையடுத்து, வெங்கடாம்பட்டியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர் திருமாறன் தலைமைத் தாங்கினார்.

அவர்கள் அனைவரும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காந்தியடிகள், காமரசரின் முழு உருவப்படத்தை வைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். மேலும், தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவையும் காந்தி, காமராசர் படங்களுக்கு முன்பாக வைத்து நூதன முறையில் வேண்டுதலில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் திருமாறன் கூறியது:

“வெங்கடாம்பட்டியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி மட்டுமல்லாது குடியிருப்புகள், கோயில், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு உபயோகத்துக்கான கட்டடங்கள் உள்ள பகுதியில் சாராயக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் சாராயக் கடை திறந்தால் மாணவர், மாணவிகள், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமாகும்.

எனவே, வெங்கடாம்பட்டியில் சாராயக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி போராடி வருகிறோம்.

சாராயத்திற்கு எதிராக அறப்போராட்டம் நடத்திய காந்தியடிகள் வழியிலும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்திய காமராசர் வழியிலும் தொடர்ந்து போராடுவோம் என்று சபதமேற்றுள்ளோம்.

எங்களது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று அவர் எச்சரித்தார்.