ogi strom in kanyakumari district

கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது என்றும் அதற்கு ஒகி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கன்னியாகுமரி,தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் 1500 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரியில் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த 150 க்கும் மேற்பட்ட கடைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

தற்போது அம்மாவட்டத்தில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசி வருகிறது. . திருச்செந்தூர் பகுதியில் மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது.

கோவளம், ராஜமங்கலம், பணகுடி உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்தே பரவலாக மழை பெய்தது. இருப்பினும் இன்று காலை 4 மணிக்கு மழையின் அளவு அதிகரிக்க துவங்கியது. இடிந்தகரை பகுதியில் மீன்பிடி சாதனங்கள், படகுகள் சூறைக்காற்று காரணமாக சேதமடைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஒகி புயலாக மாறியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.