சிவகங்கை

சிவகங்கையில் உரிய இழப்பீடு தராமல் வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை கேள்விகேட்ட மக்களை அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளினர். 

மதுரை - பரமக்குடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2015–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.  ரூ.937 கோடி செலவில் நடைபெறும் இந்தப் பணியில் ஒன்பது மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

மானாமதுரை அருகே முத்தனேந்தல் பகுதி வழியாக இந்த நான்கு வழிச்சாலை செல்வதால் இந்த கிராமத்தில் உள்ள 36 வீடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகள் அகற்றப்பட உள்ளன.

இந்தப் பணிக்காக முத்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2010–ஆம் ஆண்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுற்றறிக்கையும் வழங்கப்பட்டது. 

ஆனால், அதற்குரிய இழப்பீட்டு தொகை கடந்த 2015–ல் தான் ஒதுக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நிலத்தின் மதிப்பு உயர்ந்ததுடன் சாலைப் பணிக்கு அரசுக்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை நிலவரத்தை விட 3 மடங்கு உயர்த்தித் தரப்படும் என்று சட்டதிருத்தமும் 2015–ல் கொண்டுவரப்பட்டது.

எனவே, "இந்த நான்கு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய முத்தனேந்தல் பகுதி மக்களுக்கு 2015–ஆம் ஆண்டு சந்தை நிலவரப்படி உரிய 3 மடங்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், அந்த  மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனையடுத்து நேற்று முத்தனேந்தல் கிராமத்தில் நான்கு வழிச்சாலைக்காக வீடுகளை அகற்ற அதிகாரிகள் இயந்திரங்களுடன் வந்தனர். இந்த நான்கு வழிசாலையால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் மானாமதுரை காவல் ஆய்வாளர் சுந்தரமாணிக்கம், உதவி ஆய்வாளர் தவமுனி தலைமையில் காவலாளர்கள் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அதிகாரிகள், "நான்கு வழிச்சாலை பணிகளை தடையில்லாமல் நாங்கள் செய்ய வந்துள்ளோம். இதில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தெரியாது. கிராம மக்கள் உரிய இழப்பீடு தொகை குறித்து நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதனையேற்று நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறோம். அதுவரை நீங்கள் எந்த பணியும்  செய்ய வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை அப்புறப்படுத்திவிட்டு வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.