Officers who have prevented the burning of the dead People sitting in the middle of the nap ...
ஈரோடு
ஈரோட்டில் இறந்த முதியவரை எரிக்க விடாமல் அதிகாரிகள் தடுத்ததால் மயான வசதி கேட்டு உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மற்றும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள நேதாஜி சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கம்மா (80). வயதான் காரணத்தால் நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஒரு பாடையில் சிக்கம்மாவின் உடலை வைத்து அவருடைய உறவினர்கள் தாளவாடி– இராமாபுரம் சாலையில் உள்ள மயானத்தில் எரியூட்டுவதற்காக நேற்று மதியம் 2 மணியளவில் தூக்கிச் சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் தாளவாடி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று சிக்கம்மாவின் உடலை மயானத்தில் எரியூட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அதிகாரிகள், மக்களிடம், "வருவாய்த்துறை சார்பில் தாளவாடி– இராமாபுரம் சாலையில் மயானத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்துக்கான முறையான அங்கீகாரம் அரசிடம் இருந்து வரவில்லை. எனவே, இங்கு உடலை எரியூட்டக்கூடாது’ என்றனர்.
இதனால் கோபமடைந்த சிக்கம்மாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் உடலை தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்லும் சாலையின் நடுவே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிகாரிகளிடம் மக்கள், "எங்கள் பகுதிக்கு மயான வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதன் காரணமாக வருவாய்த்துறை சார்பில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மயானத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிக்கம்மாவின் உடலை எரியூட்டுவதற்காக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால், மயானத்துக்கான முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி தற்போது சிக்கம்மாவின் உடலை எரியூட்ட மறுக்கிறீர்களே! எங்களுக்கு உடனடியாக மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், "இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசிடம் இருந்து மயானத்துக்கான முறையான அனுமதி பெற்று தரப்படும். எனவே, தற்போது சிக்கம்மாவின் உடலை அவருக்கு சொந்தமான இடத்தில் எரியூட்டி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றனர்.
இதில் சமாதானமடைந்த மக்கள் சிக்கம்மாவின் உடலை அவருக்கு சொந்தமான இடத்தில் எரியூட்டுவதற்காக மாலை 4 மணியளவில் தூக்கிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் தாளவாடி – சாம்ராஜ் நகர் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
